
இலங்கையின் கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகியுள்ள எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதைக் காட்டும் செய்மதி படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையின் மிக மோசமான கடல்சார் அனர்த்தமாகப் கருதப்படும் எக்ஸ்- பிரஸ் பேர்ல் தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், கப்பல் மூழ்க ஆரம்பித்தது.
கப்பலில் 25 மெட்ரிக் டொன் இரசாயன நச்சுப் பொருட்களும், 300 மெட்ரிக் டொன் எண்ணெய்யும் இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கப்பல் மூழ்கும் போது எண்ணெய் மற்றும் இரசாயனப் பொருட்கள் கடலில் சேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேநேரம், கப்பலில் எண்ணெய்க் கசிவுகள் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை வரையான தகவல்களில் எண்ணெய்க் கசிவு உறுதிப்படுத்தப்படவில்லை என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை தொடர்ந்தும் எண்ணெய்க் கசிவுகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக கப்பல் மீட்பு முகவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.