January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நாட்டில் அநியாயங்கள் அதிகரிக்கக் கூடாது”: பாணந்துறையில் சாணக்கியன்

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த போது உயிரிழந்தவரின் பாணந்துறையிலுள்ள வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சென்றிருந்தனர்.

உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உறவினர்களுடன் பிரதேச மக்களையும் சந்தித்து இருவரும் ஆறுதல் கூறியிருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாணக்கியன், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த நபரின் மரணம் தொடர்பில் ஊடகங்களில் ஒரு விதமாகவும், பொலிஸார் ஒரு விதமாகவும், உறவினர்கள் ஒரு விதமாகவும் தெரிவிக்கின்றனர். எனவே இது தொடர்பில் பாராபட்சமற்ற நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் போது அவர் வாகனத்தில் இருந்து விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் இரா.சாணக்கியன் நேற்று முன்தினம் பாராளுமன்றத்திலும் கருத்து வெளியிட்டிருந்ததுடன், இதன்போது நீதியான விசாரணையை வலியுறுத்தியிருந்தார்.

இதேவேளை இதற்கு முன்னர் இதுபோன்ற மற்றுமோர் சம்பவம் மட்டக்களப்பு பகுதியிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.