இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் அதனை தடுப்பதற்காக மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பொது இடங்களில் சமூக இடைவெளியை பேணல், முகக்கவசம் அணிதல் போன்ற முக்கிய சுகாதார பாதுகாப்பு விதி முறைகள் அந்த வர்த்தமானி ஊடாக கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பணியிடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் அனைத்து நபர்களினதும் உடல் வெப்ப நிலை அளவிடுதல் அவசிமாகும் என்பதுடன் அந்த இடங்களில் இருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை நெருக்கடியான வகையில் இல்லாதவாறு வைத்துக்கொள்ளுதலும் அவசியமாகும்.
அதேபோன்று பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது 10,000 ரூபா வரையிலான தண்டம் விதிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் மினுவாங்கொட அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பணியாற்றுபவர்கள் மற்றும் அவர்கள் தொடர்புகளை பேணியோரிடையே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனைகளின் மூலம் நேற்று வரையில் 1750 பேர் வரையிலானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 500 பேர் வரையிலானோர் அந்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோருடன் தொடர்புகளை பேணியவர்களாகும்.
இதனால் நாட்டுக்குள் இது சமூக தொற்றாக மாறியுள்ளமை உறுதியாகியுள்ளது.
இந்த நிலைமையில் கொழும்பு உள்ளிட்ட சன நெரிசலான இடங்களில், எழுந்தமானதாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இதில் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.