சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு தமது அணி முயற்சிக்கிறது என்ற கூற்றை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நிராகரித்துள்ளார்.
“நாங்கள் அப்படி சேறு பூச மாட்டோம். நாங்கள் விமர்சிக்க விரும்பினால், அதை நேரடியான முறையில் செய்வோம்’என்றும் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்பதை ஆதரிப்பதாக கூறப்படும் கூற்றுகளையும் அவர் இதன்போது நிராகரித்தார்.
“ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருவாரா என்பது எனக்குத் தெரியாது. நான் 2019 முதல் அவருடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்தவில்லை.அவர் பாராளுமன்றத்திற்குள் நுழைய விரும்புகிறாரா என்பதை தீர்மானிக்க வேண்டியது அவரே என்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் கூறினார்.