
இலங்கையில் இணையம் ஊடாக முன்னெடுக்கப்படும் நடமாடும் உணவு விநியோக சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இணையவழி உணவு விநியோக சேவைகள் குறித்து நுகர்வோர் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சில உணவு விநியோக சேவை வழங்குநர்களால் பொருட்களின் நிர்ணய விலையில் 30% முதல் 40% வரை கூடுதலான விலை சேர்க்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, இலங்கையில் இயங்கும் கைத்தொலைபேசி செயலிகளுடனான உணவு விநியோக சேவைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
கைத்தொலைபேசி செயலி அடிப்படையிலான உணவு விநியோக முறை ஊடாக பொதுமக்கள் ஒரு நல்ல சேவையை பெற்றுக் கொண்டுள்ள போதிலும் இதனால் நுகர்வோருக்கு ஏற்படும் சிக்கல் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.