January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் 19 : அதிக ஆபத்துள்ள மாவட்டமாக கொழும்பு!

கம்பஹா மாவட்டம் போன்று கொழும்பு மாவட்டமும் அதிக ஆபத்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று (வியாழன் )அறிவித்துள்ளது.

தற்பொழுது நாளொன்றுக்கு சுமார் 6,000 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது ஆனால் அப் பரிசோதனைகள் 10,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

மேலும் அவர், “இதனைச் செய்வதற்கு கொரோனா வைரஸ் பரிசோதனை கொள்கைகள் புதுப்பிக்கப்பட வேண்டும், சரியான சோதனைக் கொள்கைகள் அறிவிக்கப்பட வேண்டும்.

கொரொனா நோயாளிகளை அடையாளம் காண பி.சி.ஆர் சோதனை வழிமுறை தொடர்பான தகவல்களை விரைவில் புதுப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்.

பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது மனித திறன், பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை மற்றும் தொழில்நுட்ப திறன் போன்ற பல அளவுகோல்களை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.

கொவிட் நோயாளிகள் புகாரளித்த பகுதிகளை சுகாதார ஊக்குவிப்பு பணியகம் அடையாளம் காண வேண்டும்.நோயாளிகள் மற்றும் அவர்களுடன் நேரடித் தொடர்பிலுள்ளவர்களின் பரவல் தொடர்பான சரியான புள்ளிவிவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த சுகாதார மேம்பாட்டு பணியகத்தை,அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது” என தெரிவித்துள்ளார்.