
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பலால் ஏற்பட்டுள்ள சமுத்திர பாதிப்புக்காக 19 மில்லியன் டொலர்களை ஆரம்பகட்ட நஷ்ட ஈடாக கப்பல் நிறுவனத்திடம் இருந்து கோருவதற்கு இலங்கை கரையோரப் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இது குறித்து சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுற தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் ஏற்பட்டுள்ள சமுத்திர பாதிப்பை இலகுவில் சீர் செய்ய முடியாது என்றும், இப்போது சமுத்திர பாதிப்பு குறித்த ஆய்வுகளை நாம் முன்னெடுத்துள்ள நிலையில் ஆரம்ப கட்டமாக ஒரு தொகை நஷ்ட பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கப்பலால் கடலில் ஏற்பட்டுள்ள விளைவுகளை சீர் செய்ய நீண்டகாலம் எடுக்கும். அதுமட்டுமல்ல கடலில் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் துண்டுகளை முழுமையாக அகற்றுவது என்பது இலகுவான காரியமும் அல்ல. அவை கடலில் சகல பகுதிகளுக்கும் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கரையோரப் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட அச்சுறுத்தலான பொருட்கள் என்னவென்பது இன்னமும் வெளிப்படவில்லை. கப்பலில் இருந்த 80 வீதமான பொருட்கள் கடலில் கலந்துள்ளன. அத்துடன் ஆயிரத்திற்கும் அதிகமான கொள்கலன்கள் கடலில் மூழ்கியுள்ளன. அவற்றை அகற்றுவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை. கப்பலில் எரிபொருள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இவை ஆபத்தானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.