நுவரெலியா மாவட்ட மக்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பமானது.
நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் ஆரம்பமான தடுப்பூசி திட்டத்தின் ஆரம்பமாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள், பொலிஸார், தோட்ட அதிகாரிகள் மற்றும் தோட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இந்த மாவட்டத்துக்கென 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் தொற்றுப் பரவல் அபாயமுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 40 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏனைய 10 ஆயிரம் தடுப்பூசிகளும் பொலிஸார், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மற்றும் பெருந்தோட்டத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
நுவரெலியாவில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமானதும் அதனை பெற்றுக்கொள்வதற்காக பெருமளவானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
காமினி தேசிய பாடசாலையில் ஆரம்பமான தடுப்பூசி ஏற்றும் பணியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று அவதானித்தார்.