2022 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் அனைத்து மக்களையும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதற்கு எதிர்பார்க்கிறோம் என இராணுவத் தளபதியும், கொவிட் – 19 கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பு தொடர்பான தேசிய மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை முதலீட்டுச்சபை, இலங்கை வர்த்தக பேரவை மற்றும் கொழும்பு பங்குச்சந்தை ஆகியவற்றின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் திங்கட்கிழமை ஆரம்பமான இலங்கை முதலீட்டு பேரவை மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு, வாழ்க்கைத்தர மேம்பாடு மற்றும் பொருளாதார மீட்சி ஆகிய விடயங்கள் குறித்த அனுபவத்தை இந்த மாநாட்டில் பகிர்ந்து கொள்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலானது மனித வாழ்க்கைக்கு பாரிய நெருக்கடியையும் அச்சுறுத்தல் நிலையையும் தோற்றுவித்திருக்கும் அதேவேளை, சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வைரஸ் பரவல் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு மனித உயிரின் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தலை தோற்றுவித்திருக்கிறது.
தற்போதைய வாழ்க்கை முறையை பொறுத்தவரையில், நாம் எம்மை தனிமைப்படுத்திய ஒரு கட்டமைப்பிற்குள் வாழமுடியாது. மாறாக சர்வதேசத்துடன் பொருளாதார மற்றும் சமூக ரீதியான தொடர்பாடலையும் நல்லுறவையும் பேணுவது இன்றியமையாததாகும்.
அதேவேளை, இந்த கொரோனா வைரஸ் பரவலிலிருந்து முழுமையாக மீண்டு, பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, மீளவும் பழைய நிலைக்கு திரும்புவதென்பது மிகப்பெரும் சவால் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் சமூக மற்றும் பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லவேண்டியதன் அவசியம் இலங்கை அரசாங்கத்தினால் உணரப்பட்டது.
அதன்படி முதலில் கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதற்கு நாம் முக்கியத்துவம் வழங்கினோம். அடுத்ததாக தொற்றுக்குள்ளானவர்களை தொற்றுக்குள்ளாகாதவர்களிடமிருந்து தனிமைப்படுத்தினோம்.
பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சையை வழங்குவதன் மூலம், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்து கொள்வதில் கவனம் செலுத்தினோம்.
மேலும் வருமான வீழ்ச்சி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்வதில் சிக்கல் ஆகியவற்றினால் பொதுமக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவதை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதன் ஊடாக அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் தொற்றுக்குள்ளாவோரின் வீதத்தை குறைப்பதிலும் கவனம் செலுத்தினோம்.
இறுதியாக தொற்றுப் பரவலின் போதும் அதன் பின்னரும் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தினோம்.
கொரோனா வைரஸ் பரவலின் முதலாம் மற்றும் இரண்டாம் அலையை திறம்பட எதிர்கொண்ட நாம், இப்போது அதன் மூன்றாவது அலையையும் வெற்றிகரமாக முறியடிக்கும் நிலையை அண்மித்திருக்கின்றோம்.
அதுமாத்திரமன்றி இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் வர்த்தக பங்காளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஒருபோதும் தவறவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், இலங்கையானது சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான மிகவும் பாதுகாப்பான நாடு என்றும் உறுதியளித்தார்.