November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் குடும்பத்தை விடுவிக்க அவுஸ்திரேலியாவுக்கு அழுத்தம்

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் குடும்பமொன்றை விடுவிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் குடும்பமொன்றின் 3 வயது சிறுமி தர்னிகா நோயுற்றதைத் தொடர்ந்தே, அவுஸ்திரேலியாவுக்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

நோயுற்றிருந்த சிறுமிக்கு காய்ச்சல், வாந்தி மற்றும் தலைசுற்று அதிகரித்ததை அடுத்து, அவுஸ்திரேலியாவின் பேர்த் மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக இடமாற்றப்பட்டுள்ளார்.

தர்னிகா இரத்த நச்சுப்பாடு மற்றும் நியுமோனியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமிக்கு சிகிச்சை வழங்குவதில் கிறிஸ்மஸ் தீவு அதிகாரிகள் தவறிழைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தர்னிகாவுக்கு தேவையான சிகிச்சைகள் கிறிஸ்மஸ் தீவில் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தர்னிகாவின் பெற்றோர் ஒரு தசாப்தத்துக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி, இலங்கையில் இருந்து படகு மூலம் வந்தவர்களாவர்.

சிறுமி நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு புகலிடம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.

அவுஸ்திரேலிய சிவில் சமூக அமைப்புகளும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்க் குடும்பம் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.