
இணையத்தில் விளம்பரம் செய்து, 15 வயது சிறுமியை விற்ற நபர் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை பிரதேச தொடர்மாடி வீடொன்றை வாடகைக்கு எடுத்து, குறித்த சிறுமியை அங்கே தடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியின் புகைப்படத்துடன் இணையத்தளத்தில் செய்யப்பட்ட விளம்பரத்துக்கு அமைய, நபரொருவருக்கு அச்சிறுமி விற்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட சிறுமி, தெல்கொட பிரதேசத்தை சேர்ந்தவரென்றும், சிறுமியின் தாயாரிடமிருந்தே, சந்தேகநபர் சிறுமியை பெற்று கல்கிஸ்ஸை பிரதேசத்துக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கடந்த மூன்று மாதங்களில் சிறுமியை பல்வேறு நபர்களுக்கு விற்றுள்ளார். அத்துடன், பாலியல் நோக்கங்களுக்காக சிறுமியை யார் வாங்கினார் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனிடையே, சந்தேகநபர் மொறட்டுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி ஜூலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில், சிறுமியின் தாயாரிடம் பொலிஸார் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.