
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் கொழும்பு துறைமுக நகர் திட்டம் மூலம் நாட்டில் திருப்பு முனையை ஏற்படுத்தவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
2021 இலங்கை முதலீட்டு மாநாட்டில் உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2021 இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் திங்கட்கிழமை ஆரம்பமானது. இதில் 65 நாடுகள் இணைய வழியில் இணைந்துள்ளன.
மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பமானது.
இங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்;
2020 ஆம் ஆண்டில் 3.6 வீதத்தால் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்தது.கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு தேவையான சட்டங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். நாட்டின் பொருளாதார விடயங்களை சிறந்த இடத்திற்கு இட்டுச் செல்வதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம்.
இதற்கமைய, மீண்டும் எமது நாட்டில் 6 வீத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பாதையை நாம் அடைந்துள்ளோம். புதிய துறைமுக நகரத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்த ஐந்தாண்டு காலப் பகுதியில், குறைந்தது 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளை நாட்டிற்குள் ஈர்ப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியிலும் நாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்த எம்மால் முடியும் என நாம் நம்புகிறோம். உலகிலுள்ள முன்னிலை முதலீட்டாளர்கள் எமது நாட்டிற்கு வருவதை ஊக்குவிக்க எதிர்பார்க்கின்றோம். கடன் பெறுவதற்கு மாறாக கடன் அல்லாத வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதையே நாம் இலக்காக கொள்ளவேண்டும்.
இதில் தனியார் பங்குகள், சந்தைப்படுத்தல்,பங்குச்சந்தை பட்டியலிடப்பட்ட பிணையங்கள், கடன் கருவிகள் ஆகியவற்றை செயற்றிறனுடன் முன்னெடுத்து புதிய வர்த்தக மூலதனத்தை ஊக்குவிப்பது போன்ற திட்டங்களுக்கு நாம் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.கொழும்பு பங்கு சந்தையின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.