July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது; ஸ்ரீதரன் எம்.பி.தெரிவிப்பு

கொவிட் வைரஸ் பரவல் ஆரம்பித்த வேளையில் நாட்டை முடக்குமாறு வைத்திய நிபுணர்களும், அரசியல் தலைவர்களும், மதத்தலைவர்களும் வலியுறுத்தியும் அதனை கருத்தில் கொள்ளாத அரசாங்கம், இப்போது நிலைமைகள் எல்லை மீறிய பின்னர் வாராவாரம் பயணக்கட்டுப்பாட்டை நீட்டிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோற்றுப்போன நிலையில் மக்களை கொலைக்களத்திற்குள் இழுத்து செல்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிதி முகாமைத்துவப்(பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, 2020 ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை, ஏற்றுமதி இறக்குமதி (கட்டளை) சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டிய ஸ்ரீதரன் எம்.பி. மேலும் பேசுகையில்,

‘நாடு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது.கொரோனா ஒருபுறமும், மண்சரிவு,வெள்ளம் என மறுபுறமும் மக்களை பலி எடுத்து வருகின்றன.கொரோனா பயணத்தடை ,இயற்கை அனர்த்த இடம்பெயர்வு என மக்கள் பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் அரசுக்கு இவை தொடர்பில் கவலையில்லை.

நாட்டில் தற்போது ஊரடங்கும் இல்லை ,முடக்கமும் இல்லை.பயணத்தடை என்ற புதிய சொல் அரசினால் பயன்படுத்தப்பட்டு பணக்காரர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனால் நாட்கூலிகள்,வறிய மக்கள்,அன்றாடம் உழைத்து சீவிப்பவர்கள் பட்டினி சாவுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் இங்கு அமைச்சர்கள் சிலர் நாம் யுத்தத்தில் வென்றது போல் கொரோனாவையும் வெல்வோம் என வார்த்தை ஜாலங்கள் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

நாட்டில் பயணத்தடை நீடிப்பதால் மக்கள் வாழ முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் வாங்கிய வாகனத்துக்கு லீசிங் கட்ட முடியாமல் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.பயணத்தடை முடக்கத்தை கவனத்தில் எடுக்காது லீசிங் கம்பெனிகளும், நிதி நிறுவனங்களும் மக்களை வதைக்கின்றன.தற்கொலைகளுக்கு தூண்டுகின்றன.

இது தொடர்பில் அரசுக்கு அக்கறையில்லை. நாடு தற்போது எதிர்கொண்டுள்ளஅபாய நிலையை கவனத்தில் எடுத்து அரசு செயற்பட வேண்டும்.பட்டினி சாவுக்குள் தள்ளப்பட்டுள்ள மக்கள் பாதுகாத்து,அவர்களின் பசியை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.