
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்கள் அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாகவும், அதன்படி அடுத்த எதிர்க்கட்சி தலைவர் அவரே என்பதனை மனதில் வைத்துக்கொள்ளுமாறு அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூடி அவசர அவசரமாக பிரேரணை ஒன்றினை நிறைவேற்றி சஜித் பிரேமதாசவே எதிர்க்கட்சி தலைவர் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாகவும் ஆனால் அதற்கு சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் ஆதரவளிக்கவில்லை என்றும் மகிந்தனந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், அவர்களில் பத்து பேர் ரணிலை ஆதரித்து கையொப்பமிட்டுள்ளனர் என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ள மகிந்தானந்த அளுத்கமகே, இதன்மூலம் அடுத்த எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதேவேளை இன்னும் ஒரு வாரகாலத்தில் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருவார். அடுத்த பாராளுமன்ற அமர்வில் ரணில் விக்கிரமசிங்கவே எதிர்க்கட்சி தலைவர். இப்போதும் பிரபல ஹோட்டல் ஒன்றில் முக்கிய சிலர் ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிந்துகொண்டேன் என்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை பார்த்து மகிந்தனந்த அளுத்கமகே கூறியுள்ளார்.