கொவிட் தொடர்பான முறையான வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லாமலே தொழிற்சாலைகள் இயங்குவதாகவும் பயணக்கட்டுப்பாட்டை கடுமையாக அமுல்படுத்தினாலும் அதன் பெறுபேற்றை அடைய முடியாது எனவும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொவிட் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் என்ன தெரிவித்தாலும் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
அரசாங்கம் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்தி இருக்கும் இந்த காலத்தில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ‘இதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கின்றது. தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் போதுமான வசதிகள் இல்லை.
தொற்றுக்குள்ளானவர்களை மத்திய நிலையங்களுக்கு அழைத்துவர வாகன வசதிகள் இல்லை எனவும்’ அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கருத்திற் கொண்டு தொழில்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது. என்றாலும் இதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள தவறி இருக்கின்றது.
அதேபோன்று, கொவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கின்றது எனவும் அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று கொவிட் தொற்றுடன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டம் வெள்ளப் பெருக்கினால் பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த பாதிப்பு இயற்கையாக ஏற்பட்டது அல்ல. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் முறையற்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஏற்பட்ட விளைவாகும்.
அதனால்தான் கொவிட் தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றனர் எனவும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.