January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசின் பயணத்தடையால் கிடைத்த பலன் மக்களை பாதாளத்தில் தள்ளியது மட்டுமே’; சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டு

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் செயற்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அரசின் பயணத்தடையால் கிடைத்த பலன் என்னவெனில், மக்களை பாதாளத்தில் தள்ளியது மட்டுமே என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற ‘நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்த விவாதத்தில்’ உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘கொரோனா தடுப்பூசிகள் மூலம் மேற்குலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியுள்ளன.ஆனால், இலங்கையால் இந்த கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியாமைக்கு அரசின் இராஜதந்திர கொள்கையின் பலவீனமே காரணமாகவுள்ளது’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ‘இந்தியா, அமெரிக்கா, பிரிட்டனை எதிர்த்து சீனாவின் பக்கம் இலங்கை நிற்பதனால் கொரோனா தடுப்பூசிகளை இந்த நாடுகள் இலங்கைக்கு வழங்க பின்னடிக்கின்றதாகவும் முதலில் தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா தற்போது வழங்க மறுத்துவிட்டதாகவும்’ அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ‘கொழும்பு துறைமுக கடல்பகுதியில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்தபோது இலங்கை இந்தியாவின் உதவியைக் கேட்டது.ஆனால், இந்தியா முழு மனதுடன் உதவவில்லை. இந்தியா நினைத்திருந்தால் அந்தக் கப்பலின்  தீயைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் தவறே இந்தியா இவ்வாறு வேண்டா வெறுப்பாக செயற்பட காரணம்’ எனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.