சேதன உர பாவனையை நோக்கிச் செல்லும் போது எதிர்கொள்ளும் சவால்களைப் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நச்சுப் பொருட்கள் அற்ற உணவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு உள்ள உரிமை, அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சேதன உர பாவனையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் உர தட்டுப்பாடு ஒன்றை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெற்றாலும், அடுத்த போகம் வரை போதியளவு உரம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
‘இரசாயன உரத்தை தடை செய்வது முழு உலகுக்கும் நன்மை தரும் செயல் என்றும் அடித்து விரட்டினாலும், தாக்கப்பட்டாலும் இதனை செய்ய வேண்டும்’ என்று ஜனாதிபதி மாவட்ட அபிவிருத்திக் குழு பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
சேதன உரம் தொடர்பில் விவசாயிகள் தெளிவுபடுத்தப்படாமை, தேவையற்ற பயத்துக்கு காரணமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.