
சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிறு மெதிவ், சீஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் சந்தேக நபரின் பெயரில் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டதை போன்று அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்பட்டிருக்கவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன்படி போலிச் செய்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் அவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கைதாகியுள்ள தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் இன்றைய தினத்தில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சீஐடி அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட குழுவொன்று நேற்றைய தினம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.