November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா நிலைவரம்,இருதரப்பு வர்த்தகம் குறித்து ரஷ்ய-இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சு

ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை இலங்கையுடன் இணைந்து தயாரிப்பதற்கு ரஷ்யா ஆர்வமாக இருப்பதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுக்கும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த செயன்முறையை விரைவுபடுத்துமாறும் அவர் இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இலங்கைக்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசி விரைவில் வழங்கப்படும் எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்ததாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் தொடர்பான உரையாடலை மீண்டும் இரு நாடுகளும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் கொரோனாவின் தீவிரம் குறைந்த பின்னர் ரஷ்யா தனது சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்ப ஆர்வமாக உள்ளதாகவும் ரஷ்ய அமைச்சர் இதன் போது தினேஷ் குணவர்த்தனவிடம் தெரிவித்துள்ளார்.