January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் நெருக்கடிகளை சமாளிக்க 20 ஆயிரம் கோடி ரூபாவை மேலதிகமாக ஒதுக்க அரசாங்கம் தீர்மானம்

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்காக இதுவரையில் 28 ஆயிரத்து 600 கோடி ரூபா ஒதுக்கியுள்ள நிலையில், 20 ஆயிரம் கோடி ரூபாவை மேலதிகமாக ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதற்கான குறை நிரப்பு மதிப்பீடு ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அரசாங்கம் தயாராகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசாங்கம் இதுவரையில் 28 ஆயிரத்து 600 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து செல்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள், ஒரு சில துறைகளில் ஏற்பட்டுள்ள நட்டம் என்பவற்றை கருத்தில் கொண்டு தற்காலிகமாக நாட்டின் அத்தியாவசிய செயற்பாடுகளை கொண்டு செல்லவென மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாவை (200 பில்லியன் ரூபா) ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான குறைநிரப்பு மதிப்பீடு ஒன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.