இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 2,760 பேர் எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, ஜனவரி மாதத்தில் 496 பேரும் பெப்ரவரியில் 487 பேரும், மார்ச் மாதத்தில் 797 பேரும், ஏப்ரல் மாதத்தில் 725 பேரும், மே மாதத்தில் 247 பேரும், ஜூன் மாதத்தில் இதுவரை 9 பேரும் எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எலி காய்ச்சல் காரணமாக அதிகமானவர்கள் காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பதிவாகி வருவதாக தொற்று நோயியல் பிரிவு அறிக்கை தெரிவிக்கின்றது.
எலி காய்ச்சல் உருவாக்கும் பாக்டீரியா தொற்றுக்குள்ளான எலிகளின் சிறுநீர் ஊடாகவே அது வெளிச்சூழலை அடைகின்றது.
இவ்வாறு வெளியேறிய பாக்டீரியாவானது வயல்களில் காணப்படும் சிறு கிடங்குகளிலும், தேங்கியுள்ள நீர்ப்பரப்புகளிலும் தங்கி விடுகிறது.
வயல் மற்றும் இவ்வாறான இடங்களில் வேலை செய்யும்போது தோலில் ஏற்படக்கூடிய சிறு சிராய்ப்பு காயங்கள், புண்கள், தோல் உராய்வுகள் என்பன வழியாக மனித உடலுக்குள் இந்த பாக்டீரியா நுழைகிறதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவிக்கின்றது.
பாக்டீரியா தேங்கியுள்ள நீரில் குளிக்கும் போதும் கண்களில் உள்ள மென்சவ்வுகள் ஊடாகவும் அருந்தும் போதும் மனித உடலுக்குள் நுழைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காய்ச்சல், தசை வலி, தலைவலி, கண்கள் சிவத்தல், வாந்தி, அடர் மஞ்சள் சிறுநீர், சிறுநீரில் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நோய்க்கு ஒருபோதும் எந்த ஒரு சிகிச்சையும் பெறாமல் இருந்தால், சிறுநீரகங்கள், இருதயம், மூளை, ஈரல் என்பவை பாதிப்படையும் என தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உரிய காலத்தில் தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோயாளிகள் இந்த நோயில் இருந்து முற்றாக குணமடைய முடியும்.
அத்தோடு எலிக்காய்ச்சல் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ள மாவட்டங்களில், சுகாதார வைத்திய அதிகாரிகளினது கண்காணிப்பின் கீழ் வருமுன் காக்கும் மருந்துகள் வழங்கப்படுகிறது.
இந்த சிகிச்சையினை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்தோ அல்லது பிரதேசத்திற்குரிய பொதுச் சுகாதார பரிசோதகரிடமிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தொற்று நோயியல் பிரிவின் வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.