இலங்கையில் எதிர்வரும் நாட்களில் வர்த்தக மற்றும் விசேட வங்கி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இந்த வாரத்தில் வர்த்தக மற்றும் விசேட வங்கிகள் சாதாரண செயற்பாடுகளுக்காக இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் வங்கி செயற்பாடுகளை முன்னெடுத்து செல்ல அனுமதி வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் மத்திய வங்கி ஆளுநர் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய, சுகாதார அமைச்சினால் உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் உரிய வழிகாட்டல்களை பின்பற்றி உரிய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு மத்திய வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வங்கி செயற்பாடுகளை 15 பேர் கொண்ட ஊழியர்களுடன் முன்னெடுக்குமாறும் மத்திய வங்கி அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மேலும், சம்பளம் வழங்குதல், தன்னியக்க வங்கி சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்குமாறும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், வங்கி ஊழியர்களுக்கான பயண ஏற்பாடுகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிப்பதன் மூலம் முன்னெடுக்குமாறும், மத்திய வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.