January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து இடம்பெற்ற கடற்பகுதிக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து இடம்பெற்ற கடற்பகுதிக்கு பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கடற்படைத் தளபதிக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கப்பலின் உள்நாட்டு முகவர்களை சந்தேகநபர்களாக பெயரிடக் கோரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

கப்பலின் தலைமை மாலுமி உட்பட மூவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

‘எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் இலங்கைக்கான முகவரின் முகாமைத்துவ பணிப்பாளர் உட்பட 7 பேரை நீதிவான் நீதிமன்றம் மூலம் சந்தேகநபர்களாக பெயரிட முடியாது’ என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய, இலங்கைக்கான முகவரின் முகாமைத்துவ பணிப்பாளர் உட்பட 7 பேரை சந்தேகநபர்களாக பெயரிடுவதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என்று கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் ஷலனி பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.