July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எந்தவொரு சவாலையும் மக்களுடன் இணைந்து ஏற்றுக்கொள்வோம்”: பிரதமர்

தொற்று நிலைமையாக இருப்பினும், அனர்த்த நிலைமையாக இருப்பினும் மக்களுடன் இணைந்து அந்த சவாலை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தயாராகவே இருக்கின்றோம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பயணத் தடையின் போது மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என அறிந்த போதிலும், உயிரின் மதிப்பறிந்தே அரசாங்கம் பயணத் தடையை விதித்துள்ளதாகவும், இதற்கு ஆதரவளிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான புதிய அதிவேக வீதி மற்றும் 6 மேம்பாலங்களின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இருந்தவாறு காணொளி தொழில்நுட்பம் ஊடாக பிரதமர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய நாம் நாட்டை கட்டியெழுப்ப மக்களுக்கு உறுதியளித்துள்ளோம். இதன்படி கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்தவேண்டாம் என ஜனாதிபதியினால் அனைவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொறுப்புள்ள அரசாங்கமாக நாங்கள் தடுப்பூசி மூலம் எங்கள் மக்களைப் பாதுகாக்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துகிறோம். சில குறைபாடுகளை இருக்கின்றன. அவற்றை சரிசெய்ய முன்வந்துள்ளோம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன் தடுப்பூசி தொடர்பாக பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று எதிர்க்கட்சியினரை கேட்டுக்கொள்வதாகவும், இந்த தொற்று நம் அனைவருக்கும் ஒரு சவாலாகும். இந்த சவாலை சமாளிக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தொற்று நிலைமையாக இருப்பினும், அனர்த்த நிலைமையாயினும் இந்த சூழ்நிலைகளிலும் மக்களுடன் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தயார். இன்றைய நிலையை விட எதிர்காலத்தை நோக்கி நாம் அதிகமாகப் பார்க்கிறோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.