இலங்கையில் மேலும் 13 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இதன்படி மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, பொலன்னறுவை, குருணாகலை, புத்தளம், மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் முதல் கட்டமாக 25,000 டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, பதுளை, அநுராதபுரம், மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் முதல் கட்டமாக 50,000 டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறினார்.
மேல் மாகாணம், காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் யாழ்.மாவட்டங்களில் தற்போது சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு, நான்கு வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாளை (8) மேலும் 10 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டுக்கு வரும் நிலையில், ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய அவற்றை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஆபத்து அதிகமான பகுதிகளில் உள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கும், கள கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.