
இலங்கையில் சமூக ஊடகங்களில் கொவிட் 19 தொடர்பான போலியான செய்திகளை பரப்புபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலியான செய்திகளினால் பொது மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று, தடுப்பூசி திட்டம் மற்றும் டெங்கு ஒழிப்பு திட்டம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் இவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்படும் தவறான தகவல்கள் பாதித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.
போலி செய்திகளும் தவறான தகவல்களும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கின்றன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட குழு இதுபோன்ற செய்திகளை கண்டுபிடித்து அதனை பதிவிடுபவர்கள், மற்றும் பகிர்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.