இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்தில் நாட்டில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து , தொற்றுக்கு உள்ளான பலர் அடுத்தடுத்து அடையாளம் காணப்பட்டனர்.
இதற்கு சிகிச்சையளிக்கவென 13 மருத்துவமனைகள் அரசாங்கத்தினால் தயார்படுத்தப்பட்டது.
இலங்கையில் முதலாவது கொரோனா அலையின் போது நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையிலும் பார்க்க தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.
இதன்படி செப்டெம்பர் இறுதி வரையில் மொத்தமாக மூவாயிரத்து இருநூறு பேர் வரையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன் அவர்களில் மூவாயிரம் பேர் வரையிலானோர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியிருந்தனர்.
ஆனால் தற்போது நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாயிரம் வரையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் 13 மருத்துவமனைகளிலும் நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அந்த மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் மொத்தமாக 1712 கட்டில்களே உள்ளதுடன் அவற்றில் 1544 கட்டில்களில் நோயாளர்கள் உள்ளனர் என்றும் இன்னும் 168 நோயாளர்களுக்கு மாத்திரமே கட்டில்கள் இருப்பதாக கொரோனா தடுப்பு செயலணி கூறியுள்ளது.
அதேபோன்று அங்கொட (ஐ.டி.எச்), வெலிக்கந்த, கொழும்பு கிழக்கு, கம்புறுகமுவ, தெல்தெனிய மற்றும் காத்தான்குடி ஆகிய 6 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படக் கூடிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையின் அளவை விடவும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் மேலும் மருத்துவமனைகளை தயார்ப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.