July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பயணக் கட்டுப்பாட்டை இறுக்கமாக நடைமுறைப்படுத்த முடிவு!

நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பபகுதியில் அத்தியாவசிய சேவை அனுமதிப் பத்திரங்கள் இன்றி வீதிகளில் பயணிப்போரை கைது செய்து தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புபடாத மற்றும் சட்டத்திற்கு புறம்பான வகையில் வீதிகளில் பயணிப்போர் தொடர்பாக கடுமையாக நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸ்மா அதிபரினால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடாது வாகனம் செலுத்தும் மற்றும் வீதிகளில் நடமாடும் நபர்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவதாக கண்டறிந்தால் அவர்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயணக் கட்டுப்பாட்டு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 913 பேர் நேற்றைய தினத்தில் கைது செய்யபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.