இலங்கையில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டால் எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்ட போதும், தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வடைந்து செல்கிறதே தவிர குறையவில்லை என்று அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டாலும் மக்களால் அது சரியாக பின்பற்றப்படவில்லை என்றும், நாளாந்தம் 50 வீதமான வாகனங்களினதும், பொது மக்களினதும் நடமாட்டத்தை கொழும்பு உள்ளிட்ட நகர்பகுதிகளில் காணக் கூடியதாக உள்ளதாக அரச மருத்துவர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இவ்வாறான நிலைமையில் பயணக் கட்டுப்பாட்டின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காது என்றும் இதனால் அரசாங்கம் கட்டுப்பாட்டை கடுமையாக நடைமுறைப்படுத்துவது அவசிமாகும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கைகளை அதிகரித்து கொவிட் தொற்று அச்சுறுத்தல் அதிகம் உள்ள பிரதேசங்களை அடையாளம் காண நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதுடன், தடுப்பூசிகளை செலுத்துவதற்கு சரியான முறைமையொன்றை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.