கொவிட் -19 வைரஸ் பரவலை அடுத்து பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை மேலும் ஒருவார காலம் நீடிக்கும் சுகாதார நிபுணர்களின் பரிந்துரை தொடர்பில் ஆராயும் விதமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடும் செயலணிக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் அமுல்படுத்த வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். அது குறித்து தொடர்ந்தும் ஆராய வேண்டியுள்ளது. தற்போது வரையில் தொடர்ச்சியாக 23 நாட்கள் நாடு முடக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விடயத்தில் நிபுணர்களின் கருத்துக்களை மாத்திரம் கவனம் செலுத்தாது நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறு இருப்பினும் சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்.ஜனாதிபதி தலைமையில் கூடும் செயலணிக் கூட்டத்தில் இது குறித்த தீர்மானத்தை இறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.