February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சீரற்ற காலநிலையால் இதுவரை 16 பேர் பலி; 270,912 பேர் பாதிப்பு

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 10 மாவட்டங்களின் 88 கிராம சேவை பிரிவுகளில் வசிக்கும் 67,564 குடும்பங்களைச் சேர்ந்த 270,912 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டத்தில் 5 பேரும், கம்பஹா மாவட்டத்தில் மூவரும் இரத்தினபுரி மாவட்டத்தில் மூவரும், புத்தளம் மாவட்டத்தில் 2 பேரும் கொழும்பு, களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களில் மூவருமாக மொத்தமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மேலும் 5 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு, புயல் காற்று, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக நாட்டில் 15 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 935 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 26,846 பேர் 104 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.