அமெரிக்காவின் கலிபோர்னியா வைத்திய சேவை ஆதரவு அறக்கட்டளையினால் கொழும்பு வைத்திய சேவை மன்றத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்கள், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஆறு வைத்தியசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
ருஹுணு கெரலிய அமைப்பின் வேண்டுகோளுக்கமைய கிடைத்த இந்த வைத்திய உபகரணங்கள் தங்காலை புராண குடா வனவாச விகாரையில் வைத்து தங்காலை மற்றும் வளஸ்முல்ல ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பலந்தொட, வீரகெடிய, கடுவன மற்றும் சூரியவெவ மாவட்ட வைத்தியசாலைகளுக்கு இன்றைய தினம் பகிர்ந்தளிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 150 வைத்தியசாலைகளுக்கு இந்த அறக்கட்டளையினால் இதற்கு முன்னரும் அத்தியவசிய வைத்திய உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது.
கொழும்பு பொது வைத்தியசாலையின் வைத்திய சேவை மன்றத்தின் பணிப்பாளர் ரஜவெல்லே சுபூதி தேரர், மஹரகம சிறி வஜிரஞான தர்மாயதனாதிபதி வட அமெரிக்காவின் பிரதான சங்கநாயக்கர் மஹரகம தம்மசிறி தேரர், தங்காலை புராண குடா வனவாச விகாரையின் விகாராதிகாரி மண்டாடுவே தீரானந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.