January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மண்சரிவு அபாயம்: எட்டியாந்தோட்டை லெவன்ட் தோட்ட மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைப்பு!

கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை, லெவன்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 149 பேர் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

25 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பு ஒன்றுக்கு அருகில் காணப்படும் மண்சரிவு அபாய நிலைமையால் அந்த வீடுகளை சேர்ந்த குடும்பங்கள் தோட்ட நிர்வாகத்தினால் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டில் மண்சரிவு அபாயம் காரணமாக தங்களை இதேபோன்று தற்காலிக கூடராங்களில் தங்க வைத்தாகவும், பின்னர் வீடுகளுக்கு அனுப்பியதுடன் மீண்டும் தற்போது கூடாரங்களில் தங்க வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட மக்கள் இதுவரையில் வீட்டுப் பிரச்சனைக்கு அதிகாரிகள் யாரும் தீர்வு காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கும் தங்களுக்கு வேறெந்த அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைக்குழந்தைகளுடன், பாதுகாப்பற்ற இந்த கூடாரங்களில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து தங்கி வருவதாக மேலும் கவலை வெளியிட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் நேற்று மாவனெல்லை மற்றும் வரகாபொல ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.