Photo: Sri Lanka Ports Authority
கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் தீக்கிரையாகி மூழ்கிக்கொண்டிருக்கும் ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலின் குரல் தரவு பதிவு சாதனமானது (கறுப்பு பெட்டி) குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வர்த்தக கப்பல் செயலகமும், கடற்படையும் இணைந்து, குறித்த குரல் பதிவு சாதனத்தை கப்பலிலிருந்து மீட்டு, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் நேற்று (05) கையளித்தன.
கப்பல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இந்த குரல் பதிவு தரவுகள் அவசியமானதென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து கப்டன் கப்பல் நிறுவனத்துடனும், உள்ளூர் கப்பல் நிறுவனத்துடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் குரல் பதிவுகள் இந்த குரல் தரவு பதிவு சாதனத்தில் பதிவாகியிருப்பதால் அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமுள்ள குரல் தரவு பதிவு சாதனமானது, நீதிமன்றத்தின் அனுமதியுடன் இரண்டு நாட்களில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடல் பரப்பிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த கப்பலின் 20 பணியாளர்களிடம் குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர். இதில் கப்பலின் கப்டன், பிரதான பொறியியலாளர் உள்ளிட்ட இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.