July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுன்னாகம் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு செல்ல மறுப்பு

(FilePhoto)

யாழ்.சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் கொவிட்-19 நோய்த் தொற்று கண்டறியப்பட்ட  நோயாளர்கள் சிலர் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் தொற்றாளர்கள் கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு செல்ல மறுத்துவரும் நிலையில், இராணுவத்தினரிடம் அவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு வழங்கப்படவுள்ளது.

சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு கொவிட்-19 நோய் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் 10 பேரையும் கொவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்ல சுகாதாரத் துறையினரால் இன்று (06) அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

எனினும் ‘தமக்கு கொவிட்-19 நோய்த்தொற்று இல்லை எனவும் பரிசோதனைகளில் நம்பிக்கையில்லை’ எனவும் தெரிவித்த அவர்கள் அம்புலன்ஸ் வண்டிகளில் ஏற மறுத்துள்ளனர்.

அத்துடன் ‘தம்மை கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப வற்புறுத்தினால் உயிரை மாய்ப்போம்’ என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து தொற்றாளர்களை கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்ல இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.