அத்தியாவசிய சேவைகளுக்காக கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு நாளை முதல் புதிய ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த புதிய ஸ்டிக்கர் பயணக்கட்டுப்பாடு முடிவடையும் வரை செல்லுபடியாகும் வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஏற்கனவே ஒரு தினத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் பொருட்டு புதிய ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிரதி பொலிஸ் மா குறிப்பிட்டார்.
இந்த ஸ்டிக்கர்களை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் நாளை கொழும்பு நகருக்கு நுழையும் இடங்களில் தமது விபரங்களை வழங்கி பெற்று கொள்ளமுடியும்.
அத்தோடு குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் வாகனங்கள் பயணக்கட்டுப்பாடுகள் முடியும் வரை கொழும்புக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறு வழங்கப்படும் ஸ்டிக்கர்களை முறைகேடான விதத்தில் பயன்படுத்த வேண்டாம் எனவும் அத்தியாவசிய சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் ஊழியர்களையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தோடு, கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக 995 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.