
இலங்கையில் அமுலில் உள்ள பயண கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் படி சுகாதாரத் துறை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மே மாதம் 21 ஆம் திகதி நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தது. அதனை தொடர்ந்து மீண்டும் 7 ஆம் திகதிவரை பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்தது.
எனினும் மீண்டும் நாட்டின் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் 14 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என அறிவித்துள்ள நிலையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு வாரத்திற்கு பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்படாவிட்டால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பிரதிபலனை அடையமுடியாது போய்விடும் எனவும் சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தினசரி எண்ணிக்கை 3,000 க்கும் மேல் பதிவாகும் நிலைமையானது ஒரு தீவிர தொற்று நிலைமையை காட்டுவதாகவும் பயணக் கட்டுப்பாடுகள் மேலும் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, இலங்கை மருத்துவ சங்கம் நாட்டின் தற்போதைய கொரேனா நிலைமை குறித்து இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுக்கு தமது மூன்று பக்க கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.