சீனாவில் இருந்து மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இன்று காலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 869 விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குறித்த தடுப்பூசிகள், அரச ஒளடதங்கள் கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டு, பின்னர், அரச மத்திய ஒளடத களஞ்சியத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையிலான சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீன அரசாங்கத்தினால் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.