July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மனித உரிமைகள் தொடர்பான தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டாம்’: அமெரிக்காவுக்கு இலங்கை வேண்டுகோள்!

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்காவின் வெளியுறவுக் குழுவிடம் இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

வொஷிங்கடனில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க ஊடாக இவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களான பில் ஜோன்சன், டேனி கே. டேவிஸ், பிரெட் ஷெர்மன், கேத்தி மெனிங் மற்றும் டெபோரா கே. ரோஸ் ஆகியோர் இணைந்து இலங்கை தொடர்பான தீர்மானமொன்றை தயாரித்து வெளியுறவுக் குழுவிடம் சமர்பித்துள்ளதுடன், அதனை தொடர்ந்து அந்தத் தீர்மானம் செனட் சபையில் அங்கீகாரத்திற்றாக சமர்பிக்க ஏற்பாடாகியுள்ளது.

இந்நிலையில் ஆதாரமற்ற, நிரூபிக்கப்படாத அப்பட்டமான பொய்களைக் கொண்ட குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ள இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்களுக்கு இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்ப்புக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது என்று வெளிவிவகார அமைச்சு சில தினங்களுக்கு முன்னர் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் தவறான, பக்கச்சார்பான மற்றும் ஒருதலைப்பட்சமான தன்மையைக் கருத்தில் கொண்டு, இது வெறுமனே மனித உரிமை சார்ந்த தீர்மானம் அல்ல என்றும், மாறாக அமெரிக்கா உட்பட 32 நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக அமெரிக்கக் காங்கிரஸில் உள்ள ஒத்த கருத்துடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாக அறியப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகத் தென்படுகின்றது என்றும் இலங்கை விமர்சித்திருந்தது.

இதனை தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம், வொஷிங்கடனில் உள்ள இலங்கைத் தூதுவரின் ஊடாக தமத நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அமெரிக்காவின் வெளியுறவுக் குழுவிடம் அறிவித்துள்ளதுடன், இந்த தீர்மானத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ளது.