January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தொடரும் சீரற்ற வானிலை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடி மீட்புக் குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் மேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.

இதனால் நேற்று மாலை வரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 45 ஆயிரம் வரையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.