நாட்டில் பாடசாலைகள் மீண்டும் நான்கு கட்டங்களாக திறக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி போலியான செய்தி என தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, இதுபோன்ற எந்த அறிவிப்பும் அமைச்சினால் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சை மேற்கோள் காட்டி இதுபோன்ற போலி செய்திகளை பரப்புவது முறையானதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மோசமான ஒரு தொற்றுநோய் நிலைமை பரவலாக இருக்கும் சூழ்நிலையில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல.
எனவே, கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ செய்திகளை மாத்திரம் நம்புமாறு செயலாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபோன்ற போலி செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பியவர்கள் மீது பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.