July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் கொரோனா அவசர உதவிப் பொருட்கள் இலங்கை வந்தன!

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அவசர உதவிப்பொருட்கள் இலங்கை வந்தடைந்துள்ளன.

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தென்கிழக்காசிய நாடுகளுக்கு அமெரிக்க அரசாங்கம், தமது சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனமான USAID இன் ஊடாக விமானங்களில் உதவிகளை அனுப்புவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

இந்த தொகுதியில் 880,000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்,  1,200 துடிப்பு ஒக்சிமீட்டர்கள் மற்றும் 200 செயற்கை சுவாசக்கருவிகளை  =முன்கள சுகாதார ஊழியர்களுக்கும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் உதவும் வகையில் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அத்தோடு நாட்டின் சுகாதார துறையை இந்த உதவிகள் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க அரசு கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு 11.3 மில்லியன் டொலர்களையும் மோசமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள நோயாளிகளை பராமரிப்பதற்காக 200 செயற்கை சுவாச கருவிகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இவ்வாறு அவசர மருத்துவப் பொருட்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு இலங்கை, இந்தியா உள்ளிட்ட 17 ஆசிய நாடுகளுக்கு 7 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.