February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ்த் தலைவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக மக்களைக் குழப்புகின்றனர்’: அமைச்சர் டக்ளஸ்

தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக மக்களைக் குழப்புகின்றதாகவும், மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் அந்த ஊசி வேண்டாம், இந்த ஊசி வேண்டும் என்ற வகையில் மக்களை குழப்பும் வகையிலான கருத்துக்களை அரசியல்வாதிகள் முன்வைத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பில் அரசியல்வாதிகள் உள்நோக்கங்களை வைத்துக்கொண்டு மக்களை குழப்புவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பை மையமாக கொண்ட அரசியல் கருத்துக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கப்பல் விபத்து இடம்பெற்ற பகுதியில் மீன் பிடிக்க யாரும் செல்வதில்லை. அங்கு எந்த விதமான தொழில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறான நிலையில், மக்களை குழப்பும் கருத்துக்களை வெளியிடக்கூடாது.

கிளிநொச்சி மாவட்ட சட்ட விரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இறுக்கமான முடிவுகள் எடுக்கப்படும்” எனவும் அமைச்சர் டக்ளஸ் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.