November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10 பேர் பலி; பல மாவட்டங்களுக்கு மண்சரிவு,வெள்ள எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 8  மாவட்டங்களில் 54,126 குடும்பங்களைச் சேர்ந்த 219,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அத்தோடு 11 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும் 724 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை, தெவனகல கந்த மற்றும் வரக்காபொல, அல்கம கந்த போன்ற இடங்களில் இன்று (05) இடம்பெற்ற மண் சரிவு காரணமாக இருவரும் இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மாவனெல்லை தெவனகல கந்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 04 பேர் மண்சரிவில் சிக்கி காணாமல் போன நிலையில் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, புத்தளம் மாதம்பை பிரதேசத்திலும் ஹொரணையிலும் குளிக்கச் சென்ற 2 பேர் நேற்று (04) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

வெள்ள எச்சரிக்கை!
நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக களுகங்கை, கின் கங்கை, நில்வளா கங்கை, மகாவலி கங்கை, மஹா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் சீதாவக்க, கடுவலை, பியகம, கொலன்னாவை, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் 6 முதல் 18 மணித்தியாலங்களுள் தற்போது ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ள நிலைமையானது மேலும் அதிகரிக்கக் கூடும் என அத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

களனி கங்கையின் இரு மருங்குகளிலும் வசிப்பவர்களும் தாழ் நிலப்பகுதிகளில் வசிப்பவர்களும் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாஓயா நீரேந்தும் பகுதிகளில் அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னால, வென்னப்புவ, நீர் கொழும்பு, கட்டான, தங்கொட்டுவ ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை
கொழும்பு, காலி, கேகாலை, மாத்தறை, கண்டி, மாத்தளை, களுத்துறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 3 ஆம் நிலை 3 (சிவப்பு) எச்சரிக்கை நாளை (ஜூன் 06) அதிகாலை 5.30 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம் – சீதாவக்க பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்
காலி மாவட்டம் – நெலுவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்
களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட, ஹொரணை, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, அகலவத்த மற்றும் மத்துகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்,

கண்டி மாவட்டம் – தும்பனே, உடுநுவர, யட்டிநுவர பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்,

கேகாலை மாவட்டம் – கலிகமுவ, மாவனெல்ல, கேகாலை, யட்டியாந்தோட்டை, ருவன்வெல்ல, தெரணியகல, புளத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, ரம்புக்கன, அரணாயக்க மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்,

மாத்தளை மாவட்டம் – அம்பன்கங்க கோரளே, பல்லேபொல மற்றும் யட்டவத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்,

மாத்தறை மாவட்டம் – பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்,

நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்,

இரத்தினபுரி மாவட்டம் – குருவிட்ட, கிரியெல்ல, நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் எலபாத்த, அயகம, கலவான மற்றும் எஹெலியகொட பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் ஆகியவற்றில் கடந்த 24 மணி நேரத்திற்குள்  பல பகுதிகளில் 150 மி.மீ.க்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதால் மேற்கூறிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.