இலங்கையின் மோசமான அரசாங்கத்தை வெளியேற்ற சகல சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் நாட்டை கொரோனா பரவல் ஏற்படுகின்றதா, இல்லையா என்று ஆராயும் ஆய்வுகூடமாக மாற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சாடியுள்ளார்.
அரசாங்கத்தின் தன்னிச்சையான, வினைத்திறனற்ற, குழப்பமான செயற்பாடுகளால் நாட்டின் அனைத்து துறைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 5000 ரூபா கொடுப்பனவு, தடுப்பூசி வழங்கல் மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் அரசியல் இலாபம் பெற ஆரம்பித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
‘அறிஞர்களின் கூட்டணி என்று கூறிக்கொண்டு ஆட்சி பீடம் ஏறியவர்கள், மக்களின் சுவாசிக்கும் உரிமையைப் பறிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை’ என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
“பயணக் கட்டுப்பாடுகளில் மக்களை இரு விதமாக நடத்தும் நிலை உருவாகியுள்ளது. அரசியல் பின்னணி கொண்டவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான சரியான திட்டங்கள் இல்லை.
விவசாயிகள் உரம் இன்றி துன்பப்படுகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் பாதிப்பும் காடழிப்பும் தீவிரமடைந்துள்ளன.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு, துறைசார் அமைச்சர் பொறுப்பின்றி இருக்கிறார். நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது” என்று நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் பட்டியலிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுப்பதாகவும், மக்கள் நலனைக் கவனத்தில் எடுக்கும் சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் சஜித் அழைப்பு விடுத்துள்ளார்.