January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சபுகஸ்கந்த எண்ணெய்க் கசிவு களனி கங்கையில் கலப்பதைத் தடுக்க கடற்படையினர் முயற்சி

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கசிந்து, வெள்ள நீருடன் கலந்துள்ள எண்ணெய் களனி கங்கையில் கலப்பதைத் தடுக்கும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தோடு, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலக்கீழ் களஞ்சியத்தில் இருந்த எண்ணெய் வெள்ளத்துடன் கலந்துள்ளது.

வெள்ளத்தில் கலந்த எண்ணெய் பட்டிவெல ஓடையின் ஊடாக களனி கங்கையில் கலக்கும் அபாயம் இருப்பதாகவும், அதனைத் தடுப்பதற்கான முயற்சியில் கடற்படையினரும் கரையோர பாதுகாப்பு பிரிவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

களனி கங்கையில் இருந்து கொழும்பின் பியகம மற்றும் அம்பதல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் பெறப்படுகின்றன.

எண்ணெய் களனி கங்கையில் கலப்பதால், கொழும்புக்கான குடிநீர் விநியோகம் தடைப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.