July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட்டின் அடிப்படை உரிமை மீறல் மனு: மற்றுமொரு நீதியரசர் விலகுவதாக அறிவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகளில் இருந்து நீதியரசர் யசந்த கோதாகொட விலகியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தியுள்ள இவர்கள் இருவரும் தமக்கான விடுதலையை வலியுறுத்தி அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் (04) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான எஸ்.துரைராஜா, யசந்த கோத்தாகொட ஆகியோர் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதியரசர் யசந்த கோத்தாகொட, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த மனுக்களை அவசர நிலை மனுக்களாக கருதி  எதிர்வரும் 11 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, குறித்த மனு மீதான விசாரணைகளை மேற்கொண்ட நீதியரசர்கள் குழாமிலிருந்த ஜனக் டி சில்வா, தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.