July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பல் நிறுவனம் இலங்கை மக்களிடம் மன்னிப்புக் கோரியது

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அந்தக் கப்பலுக்கு சொந்தமான சிங்கப்பூரின் ‘எக்ஸ்பிரஸ் பீடர்’ கப்பல் நிறுவனம் இலங்கை மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

‘சிங்கப்பூர் செனல் நியூஸ் ஏசியா’ தொலைக்காட்சியுடனான நேர்காணலில் கலந்துகொண்டிருந்த குறித்த கப்பல் நிறுவனத்தின் பிரதானியான சுமுவெல் யொஸ்கோவிட்ஸ், இதனை தெரிவித்துள்ளார்.

”கப்பலில் ஏற்பட்ட தீயால் இலங்கையின் கடலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள, இது குறித்து கவலையடைவதுடன் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றோம். ஆனால் கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு இதுவரையில் ஏற்படவில்லை. இது சற்று ஆறுதலை தரக் கூடியதாகவும் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமது நிபுணர்கள் குழுவினர் ஊடாக தொடர்ந்தும் அது தொடர்பாக அவதானித்து வருவதாகவும் சுமுவெல் யொஸ்கோவிட்ஸ் தெரிவித்துள்ளார்.

கப்பல் தீயால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து இதுவரையில் கணக்கிடப்படவில்லை என்றும், முழுமையான காப்புறுதித் திட்டம் இருப்பதால் இதில் பிரச்சனை இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.