24 ஆவது சென். பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாடு (SPIEF’21) நேற்று முன்தினம் (02) ரஷ்யாவில் ஆரம்பமாகியது.
இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கைத்தொழில் வளங்கள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
ரஷ்ய கூட்டமைப்பின் தலைவர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட சுமார் 120 நாடுகளை சேர்ந்த உயர்மட்ட இராஜதந்திரிகளின் பங்குப்பற்றலுடன் நடைபெறுகின்ற இந்த சர்வதேச பொருளாதார மாநாட்டில் சர்வதேச பொருளாதார அமைப்புகளின் தலைவர்களும், ரஷ்யா மற்றும் பிற நாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இந் நிலையில், 24ஆவது சென். பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில்,
1997 ஆம் ஆண்டு தொடங்கிய ‘செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாடு தற்போது உலகளாவிய பொருளாதாரத்தை பற்றி பேசுகின்ற பிரதான மேடையாக மாறியுள்ளது. உலக பொருளாதாரத்தில் தற்போதைய நிலைமை தொடர்பில் பல முக்கிய விடயங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுவதுடன், அதற்கான தீர்வினை இராஜதந்திர ரீதியில் பெற்றுக்கொள்ளவும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்வரும் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அமைச்சர் விமல் வீரவன்சவுடன், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் விமலசூரிய மற்றும் கைத்தொழில் அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் அனுஷ்கா குணசிங்க ஆகியோர் இலங்கை சார்பாக கலந்துகொண்டுள்ளதாக கைத்தொழில் வளங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.