November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டை முடக்குவது ஜனாதிபதியினதோ அல்லது என்னுடைய தீர்மானமோ அல்ல’: இராணுவத் தளபதி

நாட்டை முடக்குவது, ஜனாதிபதியினதோ அல்லது என்னுடைய தனித் தீர்மானமோ அல்ல.விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே நாட்டை முடக்க தீர்மானித்தோம் என கொவிட் செயலணியின் பிரதானி இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இருக்கும் இலகுவான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியாக வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 2,500 இற்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்படுவதாகவும் மரணங்களும் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாக எமக்கு வலியுறுத்தினர் என்று இராணுவத் தளபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தற்போது நாட்டை திறப்பது ஆரோக்கியமான விடயமல்ல என்பது எமக்கும் தென்பட்டது. ஏற்கனவே இரண்டு வாரங்கள் பயணத்தடை பிறப்பிக்கப்பட்டாலும் கூட அதில் முறையாக மக்கள் செயற்படாத நிலையொன்று காணப்பட்டது.

அதன் பின்னரும் ஒரு சில பகுதிகளில் மக்களின் அநாவசிய செயற்பாடுகளை அவதானிக்க முடிந்தது. எனவே தான் 7ஆம் திகதி வரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை மேலும் ஒரு வாரகாலம் நீட்டிக்க தீர்மானித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்மானமானது ஜனாதிபதியின் தனித் தீர்மானமோ அல்லது நான் எடுத்த தனித் தீர்மானமோ அல்ல, நாட்டில் உள்ள விசேட வைத்திய நிபுணர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு அமைய, கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படுகின்றது.

எனவே ஏற்கனவே 14 நாட்கள் பயணத்தடை பிறப்பிக்கப்பட்டாலும் கூட 21 நாட்கள் தொடர்ச்சியாக கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே முழுமையான பெறுபேறுகள் வெளிப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இருக்கும் சரியான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதனால் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படும்.ஆனால் அதனையும் தாண்டி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே செயற்படுகின்றோம் எனவும் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.